tholaiththavan

Saturday, January 31, 2009

நகைச்சுவைத் திலகம் நாகேஷ் மரணம்


1000 படங்களில் நடித்த பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.



நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

நடிப்பு வாழ்க்கை:

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார்.சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை.

ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

அதன் பின்னர் சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.



நீங்காத இடம் பெற்ற தருமி ...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் அவர் நடித்த தருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது.பிழைப்புக்காக அவர் ஓட்டல் ஒன்றில் சர்வராகவும் வேலை செய்துள்ளார் (பின்னாளில் இதுவே சர்வர் சுந்தரமானது).

எம்ஜிஆருடன்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ்.

குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்ஜிஆருடன் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது. இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷுக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர்.

குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர்.'

அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க' என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ்.

திரையுலகில் தாம் சம்பாதித்த செல்வத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். ஆனால் பின்னர் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தி.நகர் பாண்டிபசாரில் அவரது நாகேஷ் தியேட்டர் பிரச்சனையில் சிக்கிய போது பகையை மறந்து எம்ஜிஆர் அவருக்கு உதவி செய்தார்.

கேபி... ஸ்ரீதர் பட்டறையில்...

எம்ஜிஆர், சிவாஜி (திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் விதிவிலக்கு!) படங்களில் காமெடியனாக நடித்துப் புகழ்பெற்றாலும், நடிகர் நாகேஷ் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜெலித்தது கே. பாலச்சந்தர் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரது படைப்புகளில்தான்.

எதிர்நீச்சல் படத்தையும், நீர்க்குமிழி படத்தையும் நடிக்க வரும் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக வைக்கலாம். சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கையை நாகேஷ் பிரதிபலித்த அளவுக்கு வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவு பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ்.
காதலிக்க நேரமில்லை படம், நாகேஷ் நகைச்சுவையில் ஒரு மைல்கல். ஒரு சாதாரண காட்சியை, வெறும் பாவனைகளில், உச்சரிப்பின் மூலம் த்ரில்லர் காட்சியாக எப்படிக் காட்டுவது என திரைப்பட இயக்குநர்களுக்கே பாடம் நடத்தியிருப்பார் நாகேஷ் (ஸ்ரீதரின் கைவண்ணம்!).



ரஜினி-கமல் யுகத்திலும்...

ரஜினி - கமல் யுகத்திலும் கலக்கியவர் நாகேஷ்.ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார்.

பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.ஆனால் கலைஞானி கமலுடன் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நெருக்கம் இருந்தது, கடைசி வரை.

கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷுக்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை.

மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது.

சொந்த சோகங்கள்...

திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷின் சொந்த வாழ்க்கை தனிமையில் சேகமாகவே கழிந்தது.

வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவர் வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

புதிதாக வெளிநாட்டுக் கார் ஒன்றை வாங்கிக் கொண்டு தன் தாயை சந்திக்க அவர் ஆசையுடன் சென்றார். ஆனால் அவரால் தாயை சந்திக்க முடியவில்லை. அவர் சென்ற போது அவரது தாயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை சந்தித்த நாகேஷ், மகனை பெரிய நடிகனாக்கிப் பார்க்க வேண்டும் என விரும்பினார். இதற்காக மகன் ஆனந்தபாபுவை வைத்து பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். ஆனால் தான் சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கும் படமாக அது அமைந்துவிட்டது.

பின்னர் சில படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அந்த வெற்றிகளை ஆனந்தபாபு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், போதைக்கு அடிமையாகி பாதை மாறிப்போனது நாகேஷுன் இதய நோயை இன்னும் தீவிரப்படுத்திவிட்டது. நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

நாகேஷின் மறைவு தமிழ் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, January 18, 2009

பொங்கல் விழா - II

பொங்கல் விழா - II

பொங்கல் விழா - I

பொங்கல் விழா - I

Wednesday, January 14, 2009

தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

உலக தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மத வேறுபாடுகள் மறைந்து, சாதி வேறுபாடுகள் ஒழிந்து அனைவரும் மகிழ்ச்சியாய் வாழ இந்த தையில் வழி பிறக்கட்டும்.



பொங்கலைப்பற்றி குறிப்பு: நன்றி தட்ஸ் தமிழ்

தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை.

தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகாவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இடையில் சித்திரைக்கு மாறிப் போனது. இப்போது மீண்டும் தை முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.



தமிழர் திருநாள்...

தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.

தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

தோற்றம்...

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது.
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.




3 நாள் விழா...

பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

போகி...

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீட்டுப் பொங்கல்...

2வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள்.

வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

மாட்டுப் பொங்கல்...

3வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும்.

ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள்.

இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

காணும் பொங்கல்....

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுதவிர நான்காவது நாள் காணும் பொங்கலாக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

கரும்பு-ஜல்லிக்கட்டு-பொங்கல்..

பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப் பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின்போதுதான் செம கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு
சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல பொங்கல் பண்டிகையின்போது கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் விசேஷமானவை. அலங்காநல்லூர், பாலமேடு, காஞ்சரம்பேட்டை ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு களமாகும்.

தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால், தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம்.


அதேசமயம், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

Thursday, January 01, 2009

Happy New Year 2009

புது வருடம்: - படித்ததில் பிடித்தது...

வாழ்துக்களுடன் தொடங்கி,
இரங்கலுடன் முடியும்
உன் வாழ்க்கை உன்னதமானது.

உன்னை வரவேற்கத்தான்
எத்துணை ஆரவாரம்,
மகிழ்ச்சிகள்,வாழ்த்துக்கள், கேளிக்கைகள்.



பிரம்மன் உனக்குஅளித்த
ஆயுட்காலம் 12 மாதங்கள்,
உலகத்தில் உன் வாழ்நாளை
முழுமை வாழ்வது நீ மட்டும் தான்.


நீ பிறக்கும்போதே, உனக்கான
கடைசி நாளும் எழுதப்பட்டுவிடுகிறது,
நீ என்ன எமனுக்கு அப்பாற்பட்டவனோ?

12 மாதங்களில் பல பருவ நிலைகளை
தரும் உன்னை ரசிக்காமல் என்ன செய்வது?


காலத்தேவனின் செல்லக்குழந்தை நீ,
யாருக்கும் காத்திறாமல்
காற்றோடு கரைந்து விடுகிறாய்.

உன்னை வைத்துத்தான் எங்களின் பிறந்தநாளும்
இறந்தநாளும் நினைவு கொள்ளப்படுகிறது,
எனவே, உன் ஒவ்வொரு நொடியும்
சுவாசிக்கபட வேண்டிய சொர்கம்.


எங்களோடு ஒன்றாக கலந்து விட்ட
உன்னை வரவேற்கிறோம்,
புத்தாண்டே வருக, வளங்கள் பல புரிக...