tholaiththavan

Sunday, June 15, 2008

Unsung Heroes

"Unsung Heroes" என்ற வரிசையில் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் "அப்பா" என்ற உறவை. எனக்கு தெரிந்து புராணகாலத்தில் இருந்து தற்போது உள்ள விஞ்ஞானம் வளர்ந்த காலம் வரை "அம்மா" உறவு அளவிற்க்கு கிடைத்த மரியாதை அப்பாவிற்க்கு கிடைக்கவில்லை என்றால் மிகையாகாது.

இதற்கு காரணம் என்ன என்று தேடினால் கிடைக்கும் விடை.. அம்மா காலை எழுந்து, வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்கி, காலை உணவு தயாரித்து குழந்தைகளை பராமரித்து பள்ளிக்கு அனுப்புவது, பிறகு குழந்தை பள்ளி முடித்து திரும்பிய பின் அவர்களின் தேவைகளை தன்னுடைய அன்பினால் பூர்த்தி செய்து, தன் கணவருக்கு தேவையானவற்றை சமைப்பது என நாள் முழுவதும் உழைத்து ஓடாக தேய்வதை நாம் கண்ணால் காண்கிறோம். "அம்மா" என்ற உறவு பெரிதும் மதிக்கபட வேண்டியது. இந்த உலகம் இந்த அளவுக்கு இது வரை தந்து வந்த, இனியும் தரப்போகிற மரியாதை சரியே.

ஆனால்....

குடும்பத்திற்காக வெளியே சிலுவையை சுமக்கும் அப்பாவின் தியாகம் கவனிக்கப்படாமல் தான் போகிறது.

உண்மையை சொல்லுங்கள், 30 வயது வரை நம்மில் எத்தனை பேருக்கு அப்பாவை பிடிக்கும். நம்மை பொறுத்தவரை காலையிலே வேலைக்கு போகின்ற அப்பா, சாயங்காலம் அல்லது இரவு வீடு திரும்புவார். வந்தவுடன் "நன்றாக படிக்கிறாயா?" என்று கேட்பார், ரேங்க் கார்டில் கையெழுத்து போடுவார், குடும்ப மற்றும் இதர செலவுக்கு பணம் தருவார்.

நாம் என்றாவது யோசித்திப்போமா? அப்பா எங்கே போகிறார், நம் குடும்பத்தேவைகளை களைய என்ன கஷ்டப்படுகிறார் என்று? இதை எண்ணி பார்க்கும் பொழுது நாம் தந்தையாக இருப்போம்.

ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன் குடும்பத்திற்காக தன்னுடைய ஆசாபாசங்களை மறைத்து அல்லது மறந்து, ரத்ததை வேர்வையாக சிந்தி நமக்கு தெரியாமலேயே நம்முடைய ஒவ்வொரு வெற்றிக்கும் பாடுபட்டு, நாம் இடறி விழும் போது நல்ல நண்பனாக தோள் கொடுத்து, கல்லூரி படிக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் தேவைக்கு சிறிது அதிகமாகவே தன் மகன் கஷ்டப்படக்கூடாது என்று பணம் கொடுத்து, படித்து முடித்த பின்னர் வேலைக்கு செல்லும் வரை தேவைகளை கவனித்து, கடைசி காலம் வரை பிரகாசிக்க முடியாமல் மண்ணோடு மண்ணாக மறைந்து போகும் வைரமாக தான் இருக்கிறார்கள்.

தன் குடும்பம் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்தியாக உருகிப்போன/உருகிபோகின்ற, என்னுடைய மற்றும் அனைத்து அப்பாகளுமே இந்த உலகின் உண்மையான "HEROகள்" தான்.

Happy Father’s Day to world’s greatest heroes.

பின் குறிப்பு: அப்பா என்ற உறவை மையமாக கொண்டு மிக அருமையாக தவமாய் தவமிருந்து படம் எடுத்த இயக்குனர் திரு.சேரன் அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home