tholaiththavan

Thursday, November 20, 2008

நம்பியார்- 7 தலைமுறை, 70 ஆண்டுகள்!



நடிக்க வந்து ஐந்து ஆண்டுகளை முடித்து விட்டாலே 'எங்கெங்கோ' போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம்.

கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்கிறார்கள், மரியாதை செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.


அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்தவர்.

மஞ்சேரியிலிருந்து ஊட்டிக்கு ..

கேரள மாநிலம் மஞ்சேரியில் பிறன்தவர்தான் நம்பியார். இவருடைய இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப் பெயரையும் சேர்த்து எம்.என். நம்பியார் ஆகி விட்டார்.8 வயதில் ஊட்டியி்ல டீ கடை நடத்தி வந்த தனது அக்காள் கணவரின் வீட்டுக்கு இடம் பெயர்ந்தார் நம்பியார். அங்கு தங்கி பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். 5ம் வகுப்பு வரை படித்தார்.சகோதரியின் குடும்பம் கஷ்டமான நிலையில் இருப்பதைப் பார்த்த அவர் அவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல், 13வது வயதில் சென்னைக்கு வந்தார்.


ஊட்டியலிருந்து நாடகத்திற்கு ..

சென்னைக்கு வந்த நம்பியாருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் வந்தது. இதனால், நவாப் ராஜமாணிக்கம் நடத்தி வந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடம்தான் கிடைத்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் பக்த ராமதாஸ் நாடகம் திரைப்படமாக உருவாகியது.

1935ம் ஆண்டு அந்த நாடகம் தமிழிலும், இந்தியிலும் திரைப்படமானது. நாடக அனுபவத்தை கருத்தில் கொண்டு நம்பியாருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ..

இப்படித்தான் சினிமாவுக்கு வந்து சேர்ந்தார் நம்பியார். அவருக்கு முதல் படத்தில் கிடைத்த சம்பளம் ரூ. 40.

சிறு சிறு வேடங்களாக நடிக்கத் தொடங்கிய நம்பியாருக்கு ஆரம்பத்தில் ஹீரோ வேடங்களும் கூட கிடைத்தன. ஆனால் வில்லன் வேடத்தில்தான் அவர் பரிமளித்தார்.இது, எம்.ஜி.ஆருடன் இணைந்த பிறகு பன்மடங்கா பிரகாசிக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் படத்தில் வில்லனா, கூப்பிடு நம்பியாரை என்று கூப்பிடும் அளவுக்கு இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அமர்க்களமாக அமைந்தது.

இருவரும் இணைந்து நடிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு இந்த ஹீரோவும் - வில்லனும் இணைந்தே நடித்து வந்தனர்.


சர்வாதிகாரி படத்தில் நம்பியாரின் வி்ல்லத்தனம் வெகுவாகப் பேசப்பட்டது. அவரும், எம்.ஜி.ஆரும் போட்ட கத்திச் சண்டை அப்போது வெகு பிரசித்தம்.தொடர்ந்து தாய் சொல்லைத் தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, விவசாயி, உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம் என இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.

வெறுக்க வைத்த வில்லத்தனம் ..

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக - அதி பயங்கர வில்லனாக - தொடர்ந்து நடித்ததால் நம்பியாரை நிஜமாகவே வில்லனாக நினைத்து விட்டனர் அந்தக் காலத்துப் பெண்கள்.

படம் பார்க்கும்போது நம்பியாரை, எம்.ஜி.ஆர். அடிக்கும் காட்சிகளுக்கு அமோக வரவேற்பு இருக்குமாம். அதிலிருந்தே மக்கள் எந்த அளவுக்கு நம்பியாரை பார்த்து பயந்தார்கள், கோபமாக இருந்தார்கள் என்பதை உணரலாம்.

இதைத்தான் பின்னாளில் இயக்குநர் வி.சேகர் தயாரித்த நீங்களும் ஹீரோதான் படத்தி்ல ஒரு காட்சியாகவே வைத்தார். அதில், நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும் ஒரு படப்பிடிப்புக்காக கிராமத்திற்கு வருவார்கள்.



அவர்களுக்கு தங்க வீடு கிடைக்காது. ஒவ்வொரு வீடாக ஏறி, இறங்கி வீடு கேட்பார்கள். ஆனால் இவர்தான் எம்.ஜி.ஆருக்கு எதிராக சதி செய்தவர், எனவே வீடு கிடையாது என்று ஒவ்வொருவரும் கூறுவது போல காட்சி அமைத்திருப்பார்கள்.இப்படி தனது வில்லத்தன நடிப்பால் அந்தக் கேரக்டருக்கே ஒரு தனி முத்திரையை உருவாக்கி விட்டவர் நம்பியார். அவரைத் தவிர வேறு எந்த வில்லன் நடிகருக்கும் இப்படி ஒரு இமேஜ் இதுவரையிலும் அமையவில்லை, இதற்கு முன்பும் அப்படி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக எம்.ஜி.ஆருடன், 75 படங்களில் இணைந்து நடித்துள்ளார் நம்பியார்.

சிவாஜிக்கும் வில்லன் ..

எம்.ஜி.ஆரைப் போலவே, சிவாஜி கணேசனுக்கும் வில்லனாக நடித்தவர் நம்பியார். இருவரும் இணைந்து அம்பிகாபதி, உத்தமபுத்திரன், தில்லானா மோகானாம்பாள், திரிசூலம், சிவந்த மண், லட்சுமி கல்யாணம் என ஏராளமான படங்களில் நடித்தனர். சிவாஜிக்குத் தம்பியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நம்பியார்.
அந்தக் காலத்து மும்மூர்த்திகளில் ஒருவரான ஜெமினி கணேசனுடனும் நிறையப் படங்களில் நடித்தவர் நம்பியார்.இந்த மூன்று நடிகர்களின் படங்களிலும் தவறாமல் நம்பியார் இடம் பெறுவது அப்போது வழக்கமாக இருந்தது.

7 தலைமுறையினருடன் ..

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், அடுத்த தலைமுறையான ரஜினி, கமல், விஜயகாந்த், அவர்களுக்கு அடுத்த தலைமுறையான விஜய் உள்ளிட்டோருடன் நடித்த பெருமைக்குரியவர் நம்பியார். மொத்தம் 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து அவர் சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த படங்கள் ஆயிரத்தைத் தாண்டும். நடிப்பனுபவமோ 70 ஆண்டுகள்.

வில்லத்தனத்தில் கலக்கிய நம்பியார் பின்னர் குணச்சித்திர வேடங்கள், நகைச்சுவை வேடங்களிலும் அசத்த ஆரம்பித்தார்.தூறல் நின்னு போச்சு படம் மூலம் இப்படி டிராக் மாறிய நம்பியார் காமெடியிலும் கலக்கியவர்.நம்பியாரின் மருமகன் தான் நடிகர் சரத் பாபு ஆவார்.

சபரிமலை அய்யப்பனின் தீவிர பக்தராகவும் மிளிர்ந்தவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்குப் போய் வந்த சாதனை படைத்தவர். இவரைத்தான் சபரிமலைக்குச் செல்லும் திரையுலகினர் குருசாமியாக ஏற்று செயல்பட்டு வந்தனர்.எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, நம்பியார் இருமுடி கட்டிச் செல்லும்போது, எம்.ஜி.ஆர். அனுப்பி வைக்கும் மாலைதான், அவருக்கு முதலில் அணிவிக்கப்படுமாம்.

இப்படிப் பழுத்த அய்யப்ப பக்தராக விளங்கி வந்த நம்பியார், அய்யப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ள இந்த மாதத்தில் மரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அய்யப்பனின் திருவடிகளையே அவர் சரணடைந்திருப்பதாக அய்யப்ப பக்தர்களும் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.


நடிப்பிலும், தனிப்பட்ட நல்ல பழக்க வழக்கங்களிலும், குண நலனிலும் நம்பியாருக்கு இணை யாரும் இல்லை. அவரது இடத்தை அவர் இருந்தபோதும் யாராலும் நிரப்ப முடியவில்லை. இனியும் நிரப்புவது அவ்வளவு சாத்தியமானதாக தெரியவில்லை.

0 Comments:

Post a Comment

<< Home